ஆன்மீக ஆசான்கள் எனும் சூஃபியாக்களின் கூற்றுப்படி, மனித மூளை மட்டுமே உணர்வூட்டும் நுட்ப மையமாக செயல்படவில்லை, ஏனெனில், அவனில், ஏனைய பிற உணர்வூட்டும் மையங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பிரதானமான மையம், இதயமாகும். அவ்விதயம்தான் அனைத்துப் பிரகாசங்களும் சங்கமிக்கும் மையத்தலமாகவும், சத்தியத்தை நேரடியாகப் புரிந்துகொள்ளத்தக்க சாதனமாகவும் திகழ்கிறது. இது நிகழவேண்டுமெனில், ஒரேயொரு நிபந்தனை, அதுதான், இதயத்தை விழிப்புணர்வுண்டாக்குவது.

நமது சில்சிலாவெனும் வழிமுறையில், விசேஷமான தியானம் எனும் முராகபாவின் உதவியோடு இது பெற்றுக்கொள்ளப்படுகிறது. பிற அமைப்புகளின் தியானங்களுக்கும், நமது தியானத்திற்கும் அடிப்படையிலேயே மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற தியான அமைப்புகள் செய்வதைப்போல், பொளதீக சரீரத்தின் சக்திகளை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒருமுகப்படுத்தும் முயற்சியை நாம் செய்வதில்லை. மாறாக, நமது வழிமுறையில், தியானம் என்பதின் அர்த்தமே, ஒருவரை உலக அலுவல்களிலிருந்து சிறிது நேரம் துண்டிக்கச் செய்து, ஒரு குறிப்பிட்ட நேரம், இறைவனின் பக்கமாக முழு  கவனம் செலுத்திய வண்ணம், முன்னோக்கி அமரச்செய்தலாகும்.

மாணவர் ஒருவர், முதல் நிலைப்பாடங்களான 10 பாடங்களைக் கற்றுத் தேர்ந்த பின்னர், தன் வாழ்வில் இஸ்லாமிய அனுஷ்டானங்களைக் கடைபிடிப்பதுடன், இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த ‘சுன்னா’ எனும் வாழ்க்கை வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம், மென்மேலும் இப்பாதையில் தொடர்ந்து  முன்னேற்றம் அடையலாம்.

சில மாணவர்களுக்கு முதற்பாடத்தினை நிறைவு செய்வதற்கே வருடங்கள் உருண்டோடிவிடும், அதே நேரத்தில் சில மாணவர்கள், இப்பாதையில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் அவரவர்கள் பெற்றிருக்கும் நிலையைப்பொறுத்தும், ஆழ்ந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து செய்து வரும் பயிற்சிகளினாலும், அதி விரைவில் இப்பாதையில் முன்னேறிச் செல்வதைக் காண முடிகிறது.

நிய்யத் எனும் எண்ணம் கொண்ட நிலையில்,  இதயம் எனும் கல்பை முன்னோக்கிச் செய்யப்படும் தியானத்துடன் முதல் நிலைப் பயிற்சிகள் துவங்குகிறது. இதில் அமைதியாக சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கும்படி சொல்லப்படுகிறது.

நமது தியான முறையில், ஒரு குறிப்பிட்ட இருப்பு நிலையிலோ அல்லது அமைப்பிலோ அமர்ந்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. ஆனால், பொறுமை காத்து அமர்ந்திருக்கும் பட்சத்தில், தேட்டவான் மீது இறையருள் பொழியப்படுகிறது. இந்நிலையில் சில உடல்ரீதியான அல்லது ஆன்மீக பலாபலன்களை உடனடியாகவே அனுபவிக்க நேரலாம். சில தேட்டவான்களுக்கு, மனநிறைவு மற்றும் இலகுவான தன்மைகளின் அதிகரிப்பு, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை, தனிப்பட்ட நுண்ணறிவு மற்றும் புரிந்துணர்வு போன்ற அனுபவங்கள், பயிற்சிகளை செய்வதின் விளைவாக ஏற்படும்.

வாராந்திர சந்திப்பு எனும் நிகழ்வில், சிறிய குழுக்களாக மாணவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து, முராகபா எனும் தியானப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, வெகுவிரைவாக முன்னேற்றங்கள் உண்டாகும். முராகபா எனும் தியானமும், இறை நாம மொழிதல்களும் வழக்கமாக பயிற்சி செய்து வரும் பட்சத்தில், ஒருவருக்கு, உண்மையாகவே இறைத் தொடர்பின் தொடர்ச்சியான தாக்கம் ஏற்பட உதவியாக இருக்கும்.