தி ஸ்கூல் ஆஃப் சூஃபி டீச்சிங் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகப் போதனைப் பள்ளி,  ஐந்து பிரதான ஞானவழிப்பரம்பரைகளான, நக்ஷ்பந்தி, முஜத்திதி, சிஷ்த்தி, காதிரி மற்றும் ஷாதலி ஆகிய பயிற்சிகளை வழங்குவதோடு, முஜத்திதி பயிற்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் தருகிறது.

இந்நிறுவனம் 1975ம் ஆண்டு, ஷைக் ஹஜ்ரத் ஆஸாத் ரஸூல் (ரஹ்) அவர்களால், தங்களின் ஆன்மீக ஆசான் ஹஜ்ரத் மவ்லவி முஹம்மது ஸயீத்கான் (ரஹ்) அவர்களின் மேலான ஒப்புதலின் பேரில் துவங்கப்பட்டது. இவ்வான்மீகக் கல்வி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டுமென்ற உன்னதமான குறிக்கோளுடன், 55 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஆன்மீக ஆசான், ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள், கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7 ம் தேதி இப்பூவுலகை விட்டும் பிரிந்தார்கள்.

இந்நிறுவனம், தி ஸ்கூல் ஆஃப் சூஃபி டீச்சிங் என்ற பெயருடன், தற்போது,உலகின் எல்லாத் திசைகளிலும் தன் கிளைகளைப் பரப்பிய வண்ணம் செயல்பட்டு வருகிறது.  அமெரிக்கா, கனடா, பிரேசில், ரஷ்யா,கஜகஸ்தான், கிரிகிஸ்தான்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,பங்களாதேஷ், பாகிஸ்தான்,துருக்கி, போலந்து,இங்கிலாந்து, இத்தாலி,ஜெர்மனி, சுவீடன்,எகிப்து, தூனிசியா,எத்தியோப்பியா,மலேசியா, சிங்கப்பூர், மற்றும் ஓமான் போன்ற உலக நாடுகளிலுள்ளோர் பலர், இதன் மாணவர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டிருக்கின்றனர்.

எல்லா சூஃபி வழிமுறைகளின் பாரம்பரிய அமைப்புகளைப்போலவே, இப்பணியும் தொய்வின்றித் தொடர்கின்றது. ஹஜ்ரத் அவர்களின் புதல்வரும், கலீஃபாவெனும் பிரதிநிதியுமான ஷைக் ஹாமித் ஹஸன் அவர்கள், இவ்வான்மீகப்பாதையில் அடியெடுத்து வைக்கும் ஆர்வலர்களுக்கு, பைஅத் எனும் தீட்சையையும், சிறந்த வழிகாட்டுதலையும் வழங்கி, இப்பள்ளியை சீரிய முறையில் வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான தேட்டவான்கள் யாவருக்கும், இவ்வழிமுறையின் பாடங்களைப் போதிப்பதன் மூலம், இவ்வான்மீகப்பாதையின் அளப்பெரும் பலாபலன்களும், சிறந்த நற்பேறுகளும் கிடைக்கப்பெறச் செய்வதே, இந்நிறுவனத்தின் தலையாய இலட்சியமாகும்.

சுயப்பரிசுத்தமும் அதன் மேம்பட்ட நிலையும் அடையப்பெறுவதற்காக, பயிற்சியின் மூலம் தரப்படுகின்ற முராகபா எனும் தியானத்தையும், இறை நாமங்களை மொழிதல்களையும், முறையாக செவ்வனே தொடர்ந்து கடைபிடித்து நடக்கும்படி மாணவர்களை இந்நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

முராகபா எனும் தியானமும், இறைநாம மொழிதல்களும், படிப்படியாக தொடர்ச்சியான அமைப்பில் திட்டமிட்டு தரப்படுவதன் மூலம், மாணவரிடத்தில் மென்மேலும் பரிசுத்தத்தன்மை ஏற்பட்டு, உலகத்துக்கும் அதன் படைப்பாளனுக்கும் இடையேயான உறவுகளைப் புதிய கோணத்தில் புரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

இப்பயிற்சிகள் யாவும், ஈருலக சர்தார் ஹஜ்ரத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ‘சுன்னா’ எனும் வழிமுறைகளின்படியும், நவீன காலச்சமுதாயத்துக்கு ஏற்றாற்போல்,அடுத்தடுத்து வரும் ஆன்மீக ஆசான்கள் மூலம், மிகக்கவனத்தோடு புத்தாக்கம் செய்யப்பட்டு என்றென்றும் ஏற்று நடக்கும் விதத்தில், திறம்பட அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும், இப்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள ஆவல் கொள்ளும் எவரும், முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இப்பள்ளியின் தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சம் என்னவெனில், முற்காலத்தில் கடினமானதெனக் கருதப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமே போதிக்கப்பட்டு வந்த இப்பயிற்சிகள்யாவும், கிழக்கிலிருந்து மேற்கு வரைப் பரவலாகக் கொண்டு செல்லப்படும் அளவுக்கு, வரலாற்று சிறப்புமிக்க ஒரு நல்ல தருணத்தை உண்டாக்கித் தருவதேயாகும்..