தஸவ்வுஃப் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகத்தின் இலட்சியம், மனிதனுக்குள் சில உயர் குணப்பண்புகளை வளர்ந்தோங்கச் செய்வதாகும். அவை, சுய பரிசுத்தம், இதயப்பரிசுத்தம், அறநெறிப் பண்பாடுகள், செயல்களில் அழகிய நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்(இஹ்சான்), இறை நெருக்கம், உள்ளார்ந்த ஞானம்(மஃரிஃபா), சுயத்தின் அழிவு(ஃபனா), நிரந்தர இருப்பு(பகா) ஆகியனவாகும்.

சுருங்கக்கூறுமிடத்து, இஸ்லாமிய ஆன்மீகத்தின் உண்மையான நோக்கம் யாதெனில், தேட்டவானுக்கு ஆன்மீகப் பயிற்சியளிப்பதின் மூலம், அவனை மிக உன்னத உயர்குணப்பண்புகளுடைய சிறந்த மனிதனாக உருவாக்குவதாகும்.

மனித சரீரத்தில் ‘மூளை’ மட்டுமின்றி  ஏனைய பிற உணர்வூட்டும் அகமிய நுட்ப மையங்கள் (Centre of Consciousness), அறிவு ஞானத்தைப் பெற்றுத்தரும் அந்தரங்கப்  புலன்களாக செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் மிகப்பிரதானமான உணர்வு மையம் இதயமாகும். அந்த இதயத்தைப் பரிசுத்தப்படுத்தி மெருகூட்டும்போது, அது ஒளிமயமான உண்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஆகிவிடுகின்றது.

தி ஸ்கூல் ஆஃப் சூஃபி டீச்சிங் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகப் போதனைப் பள்ளியின் முதல்நிலைப் பயிற்சிகள், ஒருவருக்கு, இதயம் எனும் உணர்வு மையத்தில் துவங்கி,  அனைத்து அகமிய நுட்ப மையங்களுடனான (அல்லது லதாயிஃப்களுடனான) இணைப்பை உண்டாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒருவரின் இதயத்தை செயல்பாட்டுக்குள்ளாகும் விதம் தூண்டும்போதும், மேலும் அதனைப் பரிசுத்தப்படுத்தி  தெளிவுபெறச்செய்யும்போதும்தான், அகமிய உள்ளுணர்வு அல்லது ஞானப்பார்வை எனும் அனைத்தையும் அதன் உண்மையான வடிவத்தில் காணும் நற்பேறு கிடைக்கப்பெறுகிறது.